• Thu. Apr 25th, 2024

செந்தில்பாலாஜிக்கு எஸ்.பி.வேலுமணி விட்ட சவால்

கோவையில் ஓட்டுக்கு கொலுசு கொடுக்கும் புதிய கலாச்சாரத்தை திமுகவினர் தொடங்கி வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் முகாமிட்டிருக்கும் கரூர்காரர்கள் இன்னும் 10 நாட்களில் ஊருக்கு போய்விடுவார்கள் என்றும், மேயர் பதவி தொடங்கி பேரூராட்சி தலைவர் பதவி வரை அதிமுக தான் கைப்பற்றப் போகிறது என சவாலே விடுத்தார். இதேபோல் காலம் இப்படியே இருந்துவிடாது என்றும் நிச்சயம் மாறும் என்பதை மனதில் வைத்து காவல்துறையினர் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோபம் காட்டினார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை காவல்துறையினர் திமுகவினரை போலவே செயல்படுவதாகவும் காலமும், சூழலும் நிச்சயம் மாறும் எனவும் தெரிவித்தார். கரூரிலிருந்து கொலுசுடன் வந்திறங்கியுள்ள திமுகவினர், கோவையில் வீடு வீடாக கணக்கெடுத்து பணத்தையும், கொலுசுகளையும் கொடுத்து வெற்றிபெற்று விடலாம் என நினைப்பதாக பேசினார்.

கோவை மக்களை அமைச்சர் செந்தில்பாலாஜி தவறாக எடை போட்டுவிட்டார் என்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் எனவும் சவால் விடுத்தார் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கிடப்பில் போட்டு வருவதாகவும் வழக்குகளால் தன்னையும் அதிமுக நிர்வாகிகளையும் அச்சுறுத்திவிடலாம் என அவர் எண்ணுவதாகவும் சாடினார் எஸ்.பி.வேலுமணி.

கோவையில் திமுகவினர் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் அதிமுகவினர் தேர்தல் முடியும் வரை தூக்கத்தை துறந்து பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என கூட்டத்தில் இருந்தவர்களுக்கு தைரியம் கூறிய எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு அதிமுக ஆட்சியில் என்னென்ன செய்தோம் என்பதை எடுத்துக்கூறி வாக்குகேட்குமாறு அறிவுறுத்தினார்.

அண்மை நாட்களாக கோவை காவல்துறையினர் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து காரசாரமான முறையில் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பரப்புரையின் போது பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *