• Sat. Sep 23rd, 2023

போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்..மாஸ் என்ட்ரி கொடுக்கும் சசிகலா..கிலியில் எடப்பாடி

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக மௌனமாக பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை சசிகலா ஏற்றுக்கொள்ள, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜகவின் ஆட்டம் அதிகம் இருப்பதை உணர்ந்த சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அப்போது முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அதன் முடிவில் தான் அம்மாவின் ஆன்மாவிடம் பேசியதாகவும், முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிகொள்ளுமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் நடுநிசியில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த சசிகலா , மறுநாளை கட்சி உறுப்பினர்கள் எம் எல் ஏ.,களை அழைத்து முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்துவிட்டு சிறை சென்றார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெ அணி ஜா.,அணி இரண்டாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. அதுபோல தான் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் அணி எடப்பாடி அணி என பிரிந்து ஆர் கே நகர் இடைதேர்தலை சந்தித்தது. ஆனால் இருவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

இதில் சுதாரித்து கொண்ட ஓபிஎஸ் , இபிஎஸ் அணி பாஜக தலைமையில் ஒன்றாக இணைந்தது.ஆனால் பாஜக தலைமையில் ஒன்றிணைந்தது சசிகலா ,டிடிவி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்த இருவரையும் கட்சியில் இருந்து நீக்கினர்.

அதன் பிறகு அமமுக உருவாகி அதிமுக தொண்டர்களை சசிகலா மற்றும் தினகரன் இழுக்க திணறிய அதிமுக ஒவ்வொரு நிலையை கடந்து நான்கு ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆனால் அந்த நான்கு ஆண்டுகளிலும் சசிகலா குறித்து அதிருப்தி தெரிவித்தவர்கள் சி.வி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி தவிர மற்றவர்கள் குறைவு. இப்படி இருக்க அதிமுகவின் தொடர் தோல்வி , மக்கள் மத்தியில் செல்வாக்கு இழப்பது இவை கண்கூடாக ஓ.பன்னீர் செல்வம் பார்த்து தொண்டர்கள் மத்தியில் கூறினாலும் தலைமை அளவில் அந்த குரல் எடுபடவில்லை.

இதனால் ஆரம்பத்தில் இருந்தே கடும் அதிருப்தியில் தான் ஓபிஎஸ் இருந்து வந்துள்ளார். தனக்கென ஒரு வாய்ப்பு வரும் என்று அவ்வப்போது சசிகலா குறித்து கருத்து எழும் பிறகு மறைந்து விடும், ராமர் வனவாசம் முடித்து விட்டு நாடு திரும்பிய போது பரதன் தனது அரியணை விட்டு கொடுத்து தனது விசுவாசத்தை காட்டினார் என்று சாடை மாடையாக கூறினாலும் எதற்கும் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சவில்லை. மத்தியில் நல்ல இணக்கம் இருக்கிறது.அதனை வைத்து நாங்கள் பார்த்துகொள்வோம் என்று தைரியமாக இருந்தார். ஆனால் நாள் செல்ல செல்ல பாஜக தன்னை வளர்த்து கொள்ள அதிமுகவை பயன்படுத்தி கொண்டது. ஆனால் அந்த நன்றியை மறந்துவிட்டது என பல இடங்களில் உணர்த்தியது.

எம்ஜிஆருக்கு காவி வண்ணம் பூசியது ,காவி துண்டு அணிந்தது.அதிமுக உறுப்பினருக்கு ஆண்மை இருக்கிறதா என்று பொதுவெளியில் கேட்பது போன்று எல்லை மீறி அதிமுகவை விமர்சனம் செய்தது. இதற்கு காரணம் அதிமுகவில் சரியான கிடுக்குபுடி போடுவதற்கு ஆள் இல்லை. இதனை எல்லாம் யோசித்து தான் தேர்தலின் போது கூட தேர்தலில் தோற்றால் அது உங்களால் தான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர் என பெருமை பேசிக்கொண்டாலும் தலைமை ஒரு போதும் தொண்டர்கள் கருத்தை கேட்டதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் அமைதி காத்து வந்த சசிகலா தற்போது அதிமுகவில் மாஸ் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதற்கு ஓபிஎஸ் பச்சை கொடியும் காட்டியுள்ளார்.

தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் நடந்த ரகசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தல் வெற்றி தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் அதிமுக தொண்டர்கள் இரு குழுக்களாக பிளவு பட்டு கிடந்ததால் தான் இப்படி ஒரு தோல்வியை சந்தித்து உள்ளோம்.அதனால் இனி பிரிந்திருக்க வேண்டாம் அனைவரும் ஓர் அணியாக அதிமுகவாக இருக்கலாம் என்று தொண்டர்கள் விரும்பியதாக கோரிக்கையாக ஓ.பன்னீர்செல்வத்திடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சை கொடி காட்டியதாக தான் கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ள தொண்டர்கள் மார்ச்.5 தேதி அதிமுக அமமுக இணைப்பு விழா நடைபெற உள்ளாதாகவும், அதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுகவினர்கள் மீண்டும் கட்சியில் இணைய உள்ளதாகவும், இது வெறும் ஆரம்பம் தான் இனி தமிழகம் முழுவதும் இந்த பணி முழுவீச்சில் கொண்டு செல்லப்படும் என அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அதிமுக – அமமுக இணைப்பு விழாவில் முக்கிய நிகழ்வாக ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா, தினகரன் சந்திப்பு குறித்து உறுதியாக எந்த ஒரு தகவலையும் ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை. காரணம் இப்படி ஒரு ரகசிய கூட்டம் நடந்ததை எப்படி எடப்பாடி தலைமை எடுத்துகொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே சசிகலாவை கட்சியில் இணைக்கலாமா என்று பேசியதற்கே அன்வர்ராஜாவை கட்சியில் இருந்து தூக்கினர்.ஆனால் இங்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ரகசிய கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதற்கு கட்சி தலைமை எப்படி எதிரொலிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *