• Wed. Apr 24th, 2024

புதிய சிக்கலில் சைலண்ட் அரசியல் செய்யும் சசிகலா!..

Byவிஷா

Dec 20, 2021

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது நிழலாக வலம் வந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!


அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை, டெல்லிக்கு தூது என சைலண்ட் அரசியலை மட்டும் செய்து வரும் சசிகலா, தற்போது வரை அதிமுக கொடியை தனது காரிலும், அதிமுக பொதுச் செயலாளர் என தனது அறிக்கையிலும் மட்டுமே தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். மறுபுறம் ஒற்றை தலைமைக்கு மோதல், உட்கட்சி பூசல் என அதிமுக மிகவும் பிஸியாக இருந்து வரும் நிலையில், சசிகலாவின் அடுத்தடுத்த நகர்வுகளை தமிழக அரசியல் களம் மிகவும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று புகார் அளித்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சசிகலா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. சசிகலாவிற்கு எல்லா பக்கங்களிலும் தோல்வியே மிஞ்சியது.


இதனால் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் என தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்கிறார். அதிமுகவிற்கும், அவருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் மீது கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


எனவே இந்த புகாரின் அடிப்படையில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்தால் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து சசிகலா மீதான வழக்கை துரிதப்படுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் காவல்துறை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.


எப்படியிருந்தாலும் இது அதிமுக பிரச்சினை. அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். இதில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதற்கு என்று காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதக்கூடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *