பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில நில பேரங்கள் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், சிவசேனை மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரின் ரூ.115 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அன்று சரத் பவார், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் சரத் பவார் கூறியதாவது:
எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு எதிரான எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இதன் உண்மையான காரணம் என்ன? அவர் அரசை விமர்சிக்கிறார், சில அறிக்கைகளை வெளியிடுகிறார் என்பதற்காக மட்டும் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் பாயக் கூடாது.
பிரதமரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டியது எங்களின் கடமை. ஒரு பத்திரிகையாளர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனவே, இந்த விஷயத்தை பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றேன்.
மத்திய விசாரணை அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தால், மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன், மகாராஷ்டிர ஆளுநர் சட்டமேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த விவகாரத்தையும் பிரதமர் எடுத்துரைத்தேன். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் சரத் பவார்.
அவரிடம் மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி கட்சியின் எதிர்காலம் எப்படி என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘மகாராஷ்டிரத்தில் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம். இதுபோன்ற கேள்வியை நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன். நாங்கள் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஜெயிப்போம்’ என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடியை சரத் பவார் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக்கை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
முன்னாள் காவல் துறை தலைவர் பரம் பீர் சிங் அளித்த ஊழல் புகார் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி-சரத் பவார் சந்திப்பு குறித்து ஷீரடியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் கூறுகையில், ‘எனக்கு இந்த சந்திப்பு பற்றி தெரியாது. அவர்கள் என்ன பேசிக் கொண்டனர் என்பது குறித்து அறியவில்லை’ என்றார்.