• Tue. Mar 21st, 2023

வாரிசு அரசியலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டிய பின்னணியில், ‘ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகக் கோட்பாடுகள் நிலைநாட்டப்படும் வரை தனது கட்சியின் போராட்டம் தொடரும்’ என்று பிரதமர் மோடி கூறினார்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பாஜக தலைவர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடுகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக தொண்டர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினர். பிரதமர் மோடி மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியதாவது: ‘ஜனநாயகக் கொள்கைகளைப் பற்றி கவலைப்படாத அத்தகைய கட்சிகளுக்கு எதிராக நாம் போராடுகிறோம். நம்முடைய தொண்டர்கள் சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அந்த மாநிலங்களில் கட்சி தொடர்ந்து போராடும் என்றும், ஜனநாயக விரோத சக்திகள் தோற்கடிக்கப்படும் வரை போராடும் என்றும் உறுதி அளிக்கிறேன். ஜனநாயக கொள்கைகள் நிலைநாட்டப்படும் வரை நம்முடைய போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தார்.

திரினாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் பாஜக அல்லாத முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், நாட்டின் ஜனநாயகத்தின் மீது மத்திய அமைப்புகள் மூலம் பாஜக நடத்தும் நேரடி தாக்குதல்கள் பற்றிய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட பீர்பூமில் ராம்பூர்ஹாட் படுகொலையை சிபிஐ விசாரணை செய்ததை அடுத்து இந்த கடிதம் வந்தது. பாஜக ஒரு உண்மை அறியும் குழுவை அனுப்பியுள்ளது. இது திரிணாமூல் காங்கிரஸ் மிரட்டி பணம் பறித்தல், குண்டர் வரி உள்ளிட்ட சட்டவிரோத ஆதாயத்தின் பயனாளிகளிடையே நடந்த போட்டி என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த அறிக்கை பழிவாங்கும் தன்மை கொண்டது என்று மம்தா பானர்ஜி பதிலளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், அரசின் கொள்கைகள் மற்றும் பெண்களின் நலனுக்கான நடவடிக்கைகள் அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், அவர்கள் தேர்தல் போட்டிகளில் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறினார். தலித்துகள், நலிவடைந்த, பிற்படுத்தப்பட்ட, இளைஞர்களுடன், பெண்களும் பாஜகவுக்கு ஆதரவாக இணைந்துள்ளனர். சமீபத்திய தேர்தல்களில் இதைப் பார்த்தோம் – பாஜகவுக்கு வாக்களிப்பதில் பெண்கள் முன்னணியில் இருந்தனர். பெண்களுக்கு புதிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அவர்களுக்கு பாதுகாப்பையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எரிவாயு இணைப்பு, இலவச ரேஷன் மற்றும் சுகாதார நலன்களை வழங்கும் திட்டங்கள் உள்ளன என்று கூறினார்.

‘அரசின் இந்த திட்டங்கள் அவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் நிதி அதிகாரத்தையும் அளித்துள்ளன. மேலும், இது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு புதிய திசையை அளிக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது கட்சி தொண்டர்களின் பொறுப்பு’ என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் கருத்துப்படி, கடந்த காலத்தில் எந்த அரசாங்கமும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று உணர்ந்ததால் வாக்காளர்கள் திகைப்பில் இருந்தனர். பாஜக அரசுகள் அந்த நிலையை மாற்றிவிட்டதால், யாருக்கும் பயப்படாத இந்தியாவின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றார். மிகவும் எதிர்நிலையாக்கப்பட்ட உலகில், உலகம் இந்தியாவை மனிதகுலத்தின் மீது அக்கறையும், பரிவும் கொண்ட நாடாகப் பார்க்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

‘வேகமாக மாறிவரும் உலகம் மற்றும் உலகளாவிய மாற்றங்கள் உள்ளிட்ட மூன்று காரணங்களுக்காக பாஜகவின் நிறுவன நாள் முக்கியமானது’ என்று பிரதமர் மோடி கூறினார். ‘இந்தியாவைப் பொறுத்தவரை, புதிய வாய்ப்புகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன’ என்று அவர் கூறினார்.

இது தவிர, இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டைக் கொண்டாட உள்ள நிலையில், சமீபத்திய தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சியாகவும், ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 100ஐத் தாண்டிய ஒரே கட்சியாகவும் பாஜக திகழ்கிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் பாஜகவுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார் (அரசு) நான்கு மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைத்தது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எந்தக் கட்சியும் ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்டவில்லை’ என்று பிரதமர் மோடி கூறினார்.

‘நம்முடைய அரசாங்கம் மக்களுக்காக பாடுபடுகிறது. நம்மிடம் கொள்கைகள், நல்ல நோக்கங்கள், முடிவெடுக்கும் அதிகாரங்கள் மற்றும் உறுதிப்பாடு உள்ளது. நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம், எங்கள் இலக்குகளை நிறைவேற்றுகிறோம்’ என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு செல்லுமாறு தொண்டர்களை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *