தேவையான பொருட்கள்: அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – முக்கால் டம்ளர், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 4, பூண்டு – 6 பல், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கத்தரிக்காய் – 2, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, முருங்கைக்காய் – 1, பீன்ஸ் – 5, தனியா – 3 ஸ்பூன், வரமிளகாய் – 7, சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் ஒரு கப் அரிசி மற்றும் முக்கால் கப் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் தனியா, 7 வரமிளகாய், அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும்.
பிறகு 4 தக்காளி மற்றும் காய்கறிகளை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் குக்கரை அடுப்பின் மீது வைத்து, 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொடி செய்து வைத்துள்ள மசாலாவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து ஒரு முறை கலந்து விடவேண்டும்.
பின்னர் இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் குக்கர் மூடியைப் போட்டு, 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து ஒரு ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பரிமாறி கொடுத்தால் போதும். ஹோட்டலில் செய்யும் அதே பக்குவத்தில் அற்புதமாக இருக்கும்.