• Fri. Apr 18th, 2025

திருவாரூரில் கனமழையால் சேதமடைந்த சம்பா பயிர்கள்..,
வேதனையில் விவசாயிகள்..!

Byவிஷா

Feb 3, 2023

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த சம்பா அறுவடை பணிகள் தடைபட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்கு அனுப்ப முடியாமலும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாமலும் தேக்கமடைந்துள்ளன, இதனால் 1லட்சம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் நன்னிலம் குடவாசல் கல்விக்குடி திருத்துறைப்பூண்டி நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளன. இதேபோன்று தாளடி வயல்களில் தேங்கிய தண்ணீரால் கதிர் வந்துள்ள நெற்பயிர்கள் வயலில் சாயத் தொடங்கியுள்ளன.


சம்பா அறுவடை தொடங்குவதற்கு 10 முதல் 15 நாள்களுக்கு முன்பு வயலில் உள்ள தண்ணீரை வடியவைத்துவிட்டு உளுந்து அல்லது பச்சை பயிர் விதைகள் தெளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் உளுந்து, பச்சைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால், உளுந்து, பச்சைப் பயிர் செடிகள் முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் தொடரந்து பெய்து வரும் கனமழையால் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி மற்றும் உளுந்து, பச்சைப்பயிர் சாகுபடி ஆகியவற்றில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு வேளாண் அதிகாரிகளை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.