• Sat. Apr 20th, 2024

சேலம் மேயர் பதவி செலவு 30 கோடியா? எடப்பாடி கனவு நிறைவேறுமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றது. அதேபோல நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலிலும் சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றி தீருவது என்ற வியூகத்தில் இருக்கிறார் முன்னாள் முதல்வரும் சேலம் மாவட்டத்துக்காரருமான எடப்பாடி பழனிசாமி.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவுக்கு எம்.எல்.ஏக்கள் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு திமுக எம்.எல்.ஏ தான் வெற்றி பெற்றார்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் திமுகவின் சேலம் மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பிறகு செந்தில் பாலாஜியை கோவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டு சேலம் மாவட்டத்துக்கு முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவை நியமித்துள்ளார். இப்போது கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு சவாலாக உள்ளவை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலம், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மாவட்டமான கோவை! இவை இரண்டு தான்!

இதனால் அமைச்சர் நேரு திருச்சியிலும் சேலத்திலுமாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். பொறுப்பாளரான அமைச்சர் நேரு எடுக்கும் முடிவுக்கு மாவட்டச் செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்கின்றனர் சேலம் திமுக நிர்வாகிகள்.
மாவட்டச் செயலாளரின் எதிர்ப்பை மீறி ஏழு வார்டுகளுக்கு வீரபாண்டியார் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் நேரு. மற்ற வார்டுகளுக்கு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் எம். பி எஸ்.ஆர்.பார்த்திபன் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சியை இந்த முறை அதிமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற வேகத்தோடு வியூகங்களை அமைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் உலாவும் தகவல்கள்…
சேலம் மாநகராட்சி மொத்தம் 60 வார்டுகளில், அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய சில வார்டுகள் உள்ளன. அடுத்ததாக திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ள 12 வார்டில் குறிவைத்து ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார் எடப்பாடி.

மேலும், திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 48 வார்டுகளில் 25 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் பலவீனமானவர்கள் என்று கணித்துள்ளார் எடப்பாடி. இந்த 25, திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 12, அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என நினைக்கக்கூடிய 10 ஆக சுமார் 50 வார்டுகளில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளார் எடப்பாடி.

இதற்காக ஒரு வார்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். சேலம் மாநகராட்சியில் அதிமுக ஜெயிப்பது கட்சிக்கான கௌரவம் என்பதைவிட தனது சொந்த இமேஜ் ஆகவே இதைப் பார்க்கிறார் எடப்பாடி. எனவே சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அதிகபட்சமாக தலா 50 லட்சம் வீதம் 30 கோடி ரூபாய் வரை செலவு செய்ய அதிமுக முடிவு செய்து களம் இறங்கிவிட்டது. எடப்பாடியா, ஸ்டாலினா என்று பார்த்து விடுவோம்” என்கிறார்கள் சேலம் அதிமுகவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *