• Fri. Apr 26th, 2024

கோவை மக்களுக்கு முதல்வரின் வாக்குறுதி உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தருமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 6) காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி’ என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலைச் சந்திக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும் எதிர்காலத்துக்கும் திமுக ஆட்சி அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களித்தார்கள். பத்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை வீழ்த்தி நம்மைத் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள்.

ஒரு ஆட்சி என்பது ஐந்தாண்டுக் காலம். அந்த ஐந்தாண்டுக் காலத்துக்குள் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம். ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டுக் காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியைத் தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது திமுக ஆட்சி நடந்து வருகிறது. பெரும்பான்மை பலத்தால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். அந்த எண்ணத்தோடுதான் உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.

தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் தனது வாழ்நாளின் இறுதி வரையிலும் உழைத்தவர் உத்தமத் தியாகி நாராயணசாமி நாயுடு. அவரது பிறந்தநாளில் இந்தக் கூட்டம் நடப்பது மிகப் பொருத்தமானது என்று கூறிய அவர், “நாராயணசாமி நாயுடுவின் நான்கு கோரிக்கைகளான கட்டணம் இல்லாமல் மின்சாரம், உழவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை செயல்படுத்தியது திமுக ஆட்சிதான். வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவரின் மூன்றாவது கோரிக்கை. அதனால்தான், வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தோம். வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது நான்காவது கோரிக்கை. தொழிலாக மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கை முறையாக, பண்பாடாக மாற்றுவதற்காகத்தான் வேளாண்மைத் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்துள்ளோம்.

வேளாண் துறையைப் பொறுத்தவரையில் உத்தமத் தியாகி நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாகத்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவருக்கு நான் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒன்றிய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும் வாதாடியும் பெறுகிற இயக்கமாக, ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக நீட் தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை நாம் இழந்தோம். அதனால்தான், தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். நீட் தேர்வை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பார்க்க வேண்டும். வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நீட் எதிர்ப்பில் எப்போதும் பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறிய அவர்,“கோவையில் இந்தியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

கோவை – அவிநாசி சாலையில் பாலம். சிறுவாணிக் கூட்டுக்குடிநீர்த் திட்டம். பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் பாலம். உடுமலைபேட்டை குமாரலிங்கம் சாலை பாலம். அமராவதி ஆற்றுப்பாலம். கிராஸ்கட் சாலை மேம்பாலம், பில்லூர் அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மாநகருக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், பில்லூர் அணை இரண்டாம் கட்டக் குடிநீர்த் திட்டம் என கோவை மாவட்டத்துக்கு திமுக கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோவையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 34,723 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. காந்திபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1,132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாநகர் முழுவதும் அனைத்துச் சாலைகளும் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்காமல் விட்டதன் விளைவுதான், இப்போது நகரின் முக்கியச் சாலைகள், குடியிருப்புச் சாலைகள் என எல்லாமே குண்டும் குழியுமாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். நீண்ட நாட்களாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எந்த நிலையில் இருக்கின்ற என உங்களுக்குத் தெரியும். அவை தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்போருக்கு வெளிப்படைத் தன்மையோடு இணைப்பு வழங்கப்படும். வீடு கட்ட அனுமதி பெற எளிமையான வழிமுறைகள் கையாளப்படும். சிறு, குறு தொழில் முனைவோருக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். வார்டு வாரியாகக் குறைதீர்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்படும்” என்று கோவை மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கிற திமுக அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்துத் திட்டங்களும், அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் செல்லும்.

அனைத்து வீதிகளுக்கும் வீடுகளுக்கும் போய்ச் சேரும். விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும். எனவே திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் உங்களது பொன்னான வாக்குகளை வாரி வாரி வழங்குங்கள்” என்று பேசி உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *