• Thu. Apr 18th, 2024

பொங்கல் பரிசாக ரூ5000 வழங்கவேண்டும் – இபிஎஸ்

ByA.Tamilselvan

Dec 23, 2022

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எங்களிடம் கேட்டபடி, பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5 ஆயிரமும், செங்கரும்பு தொகுப்பும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விடியா அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்புதான். இந்த விடியா அரசின் அறிவிப்பில் செங்கரும்பு இடம் பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. பொது மக்களிடையே மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று வாய் வீரம் காட்டும் முதலமைச்சர் அவர்கள், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *