



சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (பிப்ரவரி 19) மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் ( 38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பால்பாண்டி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

