• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

பிளாஸ்டிக் பயன்படுத்தியோருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் தலைமையிலான குழுவினர் ஊட்டி பிங்கர்போஸ்ட், ரோகிணி சந்திப்பு, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.  

5 கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 2. 5 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. குன்னூர் நகராட்சியில் மவுண்ட் ரோடு, பெட்போர்டு பகுதிகளில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையில் குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 9 கடைகளில் இருந்து 7.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தியதற்காக கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.19, 800 அபராதம் விதிக்கப்பட்டது.