• Sat. Apr 20th, 2024

புதிய நாடாளுமன்றக் கட்டிட செலவு ரூ.1,250 கோடியாக அதிகரிப்பு ?

புதிய நாடாளுமன்றத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்ட செலவை விட ரூ.1,250 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, `மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி’ திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. மத்திய அரசு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மூலம் ரூ.977 கோடி செலவில் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக 29 சதவிகிதம், அதாவது ரூ.282 கோடி அதிகமாகச் செலவாகும் என்று மத்திய அரசு தரப்பு வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் நாடாளுமன்றம் கட்டி முடிக்கும்போது சுமார் ரூ 1,250 கோடிக்கு மேல் செலவு உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் மாதம் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கொரோனாத் தொற்று மற்றும் சிமெண்ட், மணல் விலை அதிகரிப்பு ஆகிய பல்வேறு பிரச்னைகள் காரணமாகக் கட்டடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போதைய புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 857 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட செலவை விட 29 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துள்ளது என கூறுவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *