• Fri. Apr 26th, 2024

பழனியில் இரண்டு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம்..!

Byவிஷா

Apr 25, 2023

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே இருக்கிறது. அப்படி வரும் பக்தர்கள் எளிதில் மலைக்கோயிலை அடைய ரோப் கார் சேவை, மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையில் பயணம் செய்தால் விரைவாக செல்லலாம். அத்துடன் இந்த பயணம் நல்ல சுற்றுலா அனுபவத்தையும் கொடுக்கும். இதனால் பக்தர்கள் நடந்து செல்வதை விட இந்த ரோப் காரில் பயணிப்பதையே விரும்புகிறார்கள்.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ரோப்கார் மூலம் அதிகமாக கோயிலுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோப் கார் சேவைக்கு பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அது போல் வருடாந்திர பராமரிப்பு பணிகளும் நடைபெறும். அந்த காலகட்டத்தில் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில் இந்த மாத பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும் (ஏப்.25) நாளையும் (ஏப்.26) ரோப் கார் சர்வீஸ் ரத்து செய்யப்படுகிறது.
எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்.27 (வியாழக்கிழமை) முதல் ரோப் கார் வசதி வழக்கம் போல் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *