• Sat. Apr 20th, 2024

கூடை பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா..!

Byவிஷா

Apr 25, 2023

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி வரும் அரசு, நாங்கள் தயார் செய்யும் கூடைகளைக் கொள்முதல் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா என கூடை பின்னும் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் கோவிந்தசாமி நகர் மேட்டுப்பட்டி சாலையில் சுமார் 40 வருட காலமாக கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இங்கே சுமார் 20 வகையான கூடைகள் குடிசை தொழில் போன்று வீட்டின் முன்பே தாங்களாகவே பின்னி வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் கூடை பின்ன பயன்படுத்தப்படும் மூங்கில் மரங்கள் கேரளாவில் இருந்து பல்வேறு ஏஜென்ட்கள் மூலமாக திண்டுக்கல்லில் உள்ள கூடை பின்னும் தொழிலாளிகளிடம் வந்து சேரும்.
இவ்வாறு வரவழைக்கப்படும் மூங்கில் மரங்களை சிறு துண்டுகளாக நறுக்கி கூடை பின்னுவதற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் அளவிற்கு பட்டை பட்டைகளாக சீவி, வலுவான கூடைகளை பின்னி வருகிறார்கள். மேலும் இவர்கள் பின்னும் கூடை வகைகளில் கோழி பஞ்சாரம், முளைப்பாரி கூடை, தட்டு வகைக் கூடை, அழகுச் சாதன பூக்கூடை, இடியாப்பம் தட்டு கூடை, மிச்சர் கூடை, கடலை மில்லில் பயன்படுத்தப்படும் கூடை, காய்கறிக்கூடை, அரிசி புடைக்கும் முரம் உள்ளிட்ட ஏராளமான விதவிதமான கூடைகளும் இடம் பெற்றுள்ளன.
தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் தயார் செய்து வியாபாரம் செய்வதால், கூடை பின்னும் தொழிலாளிகளின் வியாபாரம் மந்தமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூடை பின்னும் தொழிலாளி ஸ்ரீரங்கன் கூறியதாவது, “40 வருடமாக கூடை பின்னும் தொழில் செய்து வருகிறேன். கூடை பின்ன மூலதனமாக விளங்கும் மூங்கில் கேரளாவில் இருந்து பல்வேறு ஏஜென்ட்கள் மூலம் வருவதால் விலை அதிகமாக உள்ளது. இதனால் தாங்கள் வியாபாரம் செய்யும் கூடையில் போதிய லாபம் இல்லை.
பொதுமக்கள் பல்வேறு நவீன வசதி கொண்ட கடைகளில் கொள்முதல் செய்யும்போது அவர்கள் கூறும் விலையை பேரம் பேசாமல் வாங்கி வருவார்கள். ஆனால் எங்களிடமோ சொன்ன விலையில் பாதியை குறைத்து கொடுங்கள் என்று பேரும் பேசுவது, வேதனைக்குரியதாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் விவசாயிகளுக்கு அளித்து வரும் அரசாங்கம், கூடை பின்னி வாழ்க்கை நடத்தும் எங்களுக்கும் மானியத்தில் மூங்கில் மரம் வழங்கவும், நாங்கள் தயார் செய்யும் கூடை வகைகளை கொள்முதல் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிட வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *