• Tue. Dec 10th, 2024

நிதியை முறையாக வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம். துரைச்சாமிபுரம் கிராம சபை கூட்டத்தில் முடிவு

ByM.maniraj

May 2, 2022

துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து க்கு கிடைக்க வேண்டிய நிதியை முறையாக வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு.
கழுகுமலை அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மல்லிகா சண்முகபாண்டி தலைமை வகித்தார். துணை தலைவர் அமுதா முன்னிலை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் பேசுகையில் அதன் தலைவர் மல்லிகா சண்முகபாண்டி கூறியதாவது.
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பஞ்சாயத்தில் நிதி வேண்டும். கடந்த 2010 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி துரைச்சாமிபுரம் பஞ்சாயத்திற்கு வர வேண்டிய நிதியானது அருகில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராம பஞ்சாயத்திற்கு சென்று விடுகிறது. இதனால் துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து க்கு உட்பட்ட லட்சுமிபுரம், இராமநாதபுரம் ஆகிய கிராமங்களுங்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கயத்தார் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் பலமுறை புகார் அனுப்பியும் பலனில்லை. எனவே துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து க்கு கிடைக்க வேண்டிய நிதி முறையாக வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் கழுகுமலையில் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என கூறினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிலர் பஞ்சாயத்து தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சமாதானபடுத்தினர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், செந்தில்குமார், ராமசாமி, முத்துலட்சுமி, சுதா மற்றும் தலையாரி சங்கரநாராயணன், வேளாண்மை துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.