உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் ஒரு வீட்டுக்கு ரெய்டுக்கு சென்ற போலீஸார், அங்கிருந்தவர்களை தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகப் பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துதவற்காக மன்ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னையா யாதவ் என்பவரின் வீட்டுக்கு நேற்று இரவு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது கன்னையாவிடம் போலீஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கன்னையாவின் மகளான நிஷா யாதவ் (21) மற்றும் மனைவி ஆகியோர் போலீஸாரின் இந்த நடவடிக்கையை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸார், நிஷாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூர்ச்சையாகி கீழே விழுந்த நிஷா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அங்கிருந்து உடனடியாக சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கு பெருந்திரளாக வந்து போலீஸாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சையது ராஜா காவல் நிலைய ஆய்வாளரை மாவட்ட எஸ்.பி. இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே, இந்த சம்பவத்துக்கு சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் பதோரியா கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணிந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்து வருகின்றனர். கன்னையா யாதவின் வீட்டுக்கு போலீஸார் சென்ற முறையே முதலில் தவறானது. மேலும், ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. இதில் தொடர்புடைய அனைத்து போலீஸாரும் கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.