மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதமாக குடிதண்ணீர் வராததை கண்டித்து மதுரை, திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் பெண்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அயங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நகரியில் கடந்த மூன்று மாதமாக குடிதண்ணீர் வரவில்லை. இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய அனைவரிடமும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, இன்று காலை 9 மணி அளவில் மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழி சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை நேரம் என்பதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் பணியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். சிலர் சோழவந்தான் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல தயாராயினர். ஆனால் அவர்களையும் மறித்து செல்ல விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் அதிகாரியுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிதண்ணீர் உடனே வரவேண்டும் இல்லை என்றால் மறியலை கைவிட மாட்டோம். சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவேண்டும். ஊராட்சி செயலாளர் வரவேண்டும் என்று கூறி, கடும் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மதுரை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை என்பதால் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

