
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவில், தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில், 1967, 1977 தேர்தல்களைப் போல புரட்சி வெடிக்கும் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது..,
பணம் பணம் பணம் என பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நம்முடைய முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் பணம் மட்டுமே குறியாக உள்ள பண்ணையார்களை அகற்ற வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த போகிறோம். அந்த காலத்துல பண்ணையார்கள் தான் பதவியில இருப்பாங்க. இப்ப பதவி இருக்கவங்க எல்லாம் பண்ணையாரா மாறிடுறாங்க.
வரும் 2026 தேர்தலில் தவெக புதிய வரலாறு படைக்கும். தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சியாக தவெக உருவெடுத்து வருகிறது. வரும் 2026 தேர்தலில் தவெக புதிய வரலாறு படைக்கும். 1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்.
மக்களுக்கு ரொம்போ ரொம்போ பிடிச்சுப்போன ஒருத்தன் அரசியலுக்கு வந்தா மக்களுக்கு பிடிக்கத்தானே செய்யும், என்று விஜய் குறிப்பிட்டு உள்ளார்.
1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்; ஒரு முக்கிய சக்தியாக மாறி வருகிறோம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
அந்த 2 தேர்தல்களில் என்ன நடந்தது என்று பலரும் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 1967 இல் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி சார்பாக சி.என். அண்ணாதுரை இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அரிசி தட்டுப்பாடு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக இருந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் வென்று தமிழக அரசியலில் புரட்சியை செய்தது. திமுக ஆட்சிக்கு வந்த முதல் வருடம் இது. இது தமிழக அரசியலில் திராவிட இயக்கங்களின் ஆதிக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராக ஆன அண்ணாதுரை இந்திய அரசியலையே மாற்றி அமைத்தார்.
அதன்பின் விஜய் குறிப்பிட்ட 1977ம் வருடம்.. தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 10 ஜூன் 1977 அன்று நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் முதல்முறை போட்டியாளரான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றது. அ.தி.மு.கவை தொடங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இந்தத் தேர்தல் அதிமுக, திமுக, இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி), ஜனதா கட்சி என நான்கு முனைப் போட்டியாக இருந்தது. அதிமுக என்ற பெரிய இயக்கத்தின் எழுச்சியாக இது இருந்தது. இந்த இரண்டு தேர்தல்களைத்தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
