

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு எந்தவித ஒப்புதலும் இதுவரை அளிக்காத நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என தொடர்ந்து தமிழக அரசும் , அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், மேகதாது விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

