தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி சார்ந்தவர் பவுன்ராஜ். இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளான அனுரத்திகா என்ற மாலதி தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு தாவரவியல் படித்து வருகிறார்.
நேற்று மாலை மலை அடிவார தோட்டப் பகுதிக்கு தனது தாத்தாவை பார்க்க சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. தாத்தாவுடன் மாணவி இருப்பதாக நினைத்த அவரது குடும்பத்தினர் தேடாமல் இருந்த நிலையில் இரவிலும் மாணவி வீடு திரும்பாததால் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் உடலில் காயங்களுடன் மாணவி மாலதி இறந்து கிடந்ததை அடுத்து இன்று காலை பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற இடத்தில் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாகவும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பி அதை கண்டுபிடிக்க கோரியும் உறவினர்கள் மேற்கொண்ட சாலை மறியலால் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவரது உறவினர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு பிரேத பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான முகாந்திரம் இல்லை என்ற தகவல் கிடைத்ததை அடுத்து மீண்டும் கோபமடைந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி மீண்டும் சாலை மறியல் செய்ய வந்தனர். அவர்களை தடுத்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் தேனி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து தானே விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.