


வன்கொடுமை வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனமாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார்.
தீண்டாமை மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்ட அமலாக்கம் குறித்த விவரங்களை தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முன் வைக்கிறோம்.


வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 5000 – திலிருந்து ரூபாய் 16,950 வழங்கப்படும் என்ற அரசாணை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஆதிராடர் மற்றும் பழங்குடியினர் குறைவு பணியிடங்கள் நிரப்புதல் பற்றிய அரசாணையின்படி 10,402 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதை உடனடியாக நிரப்பிட வேண்டுகிறோம். மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பானவை என எந்த வழக்கையும் தள்ளுபடி செய்யக்கூடாது நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு தேனி மாவட்ட வருவாய் துறையில் மட்டுமே காலியாக உள்ள 117 பணியிடங்களில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு காத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கி கல்வித் தகுதி அடிப்படையில் உடனடியாக அரசு வேலை வழங்கிட வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயணப்படி, நிலம் பராமரிப்பு, குழந்தைகள் கல்வி போன்றவை தேனி மாவட்டத்தில் வழங்கப்படுவதில்லை இனிவரும் காலங்களில் அரசு சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகள் 319 வழக்குகளை விரைந்து விசாரணை செய்து நீதி வழங்கிட வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் அறக்கட்டளை மூலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 137 நபர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரை அடிப்படையில் 4,79,95000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் செய்யப்படாத 1047 நபர்களுக்கு கிடைக்க வேண்டிய 31.37 கோடிகள் அதிகாரிகள் அலட்சியத்தால் விண்ணப்பிக்காமல் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 முதல் முடக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் அறக்கட்டளை மீண்டும் செயல்பட வகை செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகளுக்கு 60 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் –
தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியத்திற்கும் எட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நியமனம் செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் மாவட்ட விழி கண்குழு தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது மாவட்ட துணைத் தலைவர் சீனியப்பன் மாவட்ட துணை செயலாளர் பொன்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

