

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற இடங்களை முகாமிட்டு உள்ளதால், இதை சுற்றிலும் உள்ள சாலைகளில் போலீசார் இரும்பு ஆணிகளை கொண்ட வேலிகளை பதித்ததால், அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி எல்லைகளில் போக்குவரத்தை முடக்கியிருப்பதற்கு கடந்த 21-ந்தேதி அதிருப்தி வெளியிட்டது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், காலவரையின்றி சாலைகளை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர். ஆனால் சாலைகளை மறித்திருப்பது போலீசார்தான் எனவும் விவசாயிகளுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் விவசாய அமைப்புகள் கூறியிருந்தன.
இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டக்களங்களில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை சுமார் 11 மாதங்களுக்குப்பின் டெல்லி போலீசார் அகற்றினர். அந்தவகையில் திக்ரி மற்றும் காசிப்பூர் போராட்டக்களங்களில் இருந்து நேற்றுமுன்தினம் முதல் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. போலீசாரின் இந்த நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்று உள்ளனர். மேலும், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
டெல்லி போராட்டக்களங்களில் தடுப்பு வேலிகள் அகற்றப்படுவதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரவேற்று உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘வெறும் செயற்கை தடைகள் மட்டுமே இதுவரை நீக்கப்பட்டு உள்ளன. இதைப்போல வேளாண் சட்டங்களும் விரைவில் திரும்பப்பெறப்படும். அன்னதான பிரபுக்களின் சத்யாகிரகம் வாழ்க’ என குறிப்பிட்டு உள்ளார்.