உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர் ஏசு பாதமும் வெற்றி பெற்றனர்.
அதேபோல், திமுக சார்பில் 6-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக மனோகரனும், 18-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அவரது மனைவி சரஸ்வதியும் வெற்றிப் பெற்றனர்.
திமுக சார்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ் அமுதனும், 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழியும் வெற்றி பெற்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றதையடுத்து, வேட்பாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உள்ளாட்சித் தேர்தலில், பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னத்தாய் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்றதால், அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.