விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 4 வார்டுகளில் மூன்று வார்டுகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 43-ல் 27 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி, சட்டசபை தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மகத்தான வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும்’ என அவர் கூறியுள்ளார்.