பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ,சிபிஐக்கும் தொடர்பு உள்ளது என விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு.
விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை, மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
இந்தியாவில் முன்னேற விழையும் 112 மாவட்டங்களில், விருதுநகர் மாவட்டத்திற்கு எம்.எஸ்.எம்.இ. விருது கிடைத்துள்ளது. இந்த மாவட்டம் சிறு தொழில்களை அதிகம் கொண்டது. விருது வழங்கும் அதே வேளையில் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை காக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசி வந்து சென்ற பிறகு சி.பி.ஐ. நடவடிக்கை தொடர்கிறது. இது பா.ஜ.க.வுக்கும், சி.பி.ஐ.க்கும் உள்ள தொடர்பையும், அண்ணாமலைக்கும், சி.பி.ஐ.க்கும் உள்ள தொடர்பையும் காட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கை, தமிழகத்திற்கும், தொழில் நகரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஜி.எஸ்.டி.கவுன்சில் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சில் பா.ஜ.க.வின் துணை அமைப்பாக செயல்படுகிறது. தேன், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை உயர்த்தி இருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதை ரத்து செய்ய வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.