• Thu. Apr 25th, 2024

சென்னை பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை குறைப்பு..!

Byவிஷா

Nov 24, 2021

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தக்காளி விலை உயர்வை உடனடியாக அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதைத்தொடர்ந்து, தக்காளி விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெகு விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியிருந்தார்.


அதேபோல், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சென்னையில் இன்று பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, பசுமை பண்ணை கடைகளில் விற்க இரண்டு நாட்களுக்கு 15டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *