• Wed. Sep 18th, 2024

மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, மக்கள் நலப் பணியாளர் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக 1989-ல் 25,354 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் 1991-ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1997 பிப்ரவரியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. அதனையடுத்து பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது என்று அவர் கூறினார்.

அதனையடுத்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2006- ஜூனில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் கலைஞர் கருணாநிதி வேலை அளித்தார். ஊராட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 12,618 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2011 நவம்பரில் மக்கள் நலப் பணியாளர்களை ஜெயலலிதா அரசு பணி நீக்கம் செய்தது. இது திமுக ஆட்சிக்கு வரும்போது பணி வழங்குவதும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப் பணியாளர்களை நீக்குவதும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வேலை நீக்கத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.

2014 ஆகஸ்டில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல்மேறையீடு செய்தது. இந்தநிலையில், 12,524 ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என முதல்வர் கூறினார்.

மேலும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.3,000 ஊதியம், இனி ரூ.5,000-ஆக உயர்த்தப்படும். 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊராட்சி பணியும் ஒதுக்கி, கூடுதலாக ரூ.2,500 மாத ஊதியம் தரப்படும். ஒட்டுமொத்தமாக மீண்டும் வேலை பெறக்கூடிய மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் கிடைக்கும் என்றார். ஏற்கனவே பணியில் இருந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்கள் விரும்பினால் பணி தரப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *