• Fri. Mar 29th, 2024

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு..

அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை எனவும், அதற்கு தேவையான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது வன்னியர்களுக்கான 10.% இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது : –

10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்படி 7 பேர் கொண்ட சமூகநீதி குழு அமைக்கப்பட்டது. அவர்களுடன் முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டு, உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசு மீண்டும் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக இருக்கின்ற புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். தமிழக அரசு நினைத்தால் இந்த புள்ளி விவரங்களை ஒரு வார காலத்தில் சேகரிக்க முடியும். உள் ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடிய தமிழக அரசு, இந்த சட்டப்பிரச்சனையை சிறப்பாக கையாண்டது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வழங்கிய கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கினோம்.

இதற்கு முன்பு அதிமுக – திமுக மேல் வைத்த குற்றச்சாட்டுகளின் உள்ளே நாங்கள் போக விரும்பவில்லை. இது சமூக நீதி பிரச்சனை என்பதால் இதில் அரசியல் வேண்டாம். பாமகவின் கோரிக்கையை ஏற்று அதிமுக 10.5% உள் ஒதுக்கீடு கொண்டுவந்தது. திமுக அதனை உறுதி செய்தது. எனவே இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *