• Fri. Apr 19th, 2024

ராமஜெயம் கொலை வழக்கு – ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை

ByA.Tamilselvan

Jan 18, 2023

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது . முதல்கட்டமாக இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறுகிறது
அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனால் ராமஜெயம் கொலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடிக்கிறது.
புதிய விசாரணை குழு ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்ட காவலர்கள் இடம் பெற்றனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளின் மீது போலீசாரின் சந்தேக பார்வை விழுந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற போதுதான் ராமஜெயம் திட்டம் போட்டு கடத்தி கொல்லப்பட்டார். இதையடுத்து அதே பாணியில் இதற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள், அதில் ஈடுபட்ட ரவுடிகள் பற்றிய பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் உள்பட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. . இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *