வில் ஸ்மித் மேடையில் வைத்து க்ரிஸ் ராக்கை அறைந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சினிமா துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிகம் பேசப்படும் விருதாக அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகள் உள்ளன. இந்த ஆண்டிற்கான 94வது ஆஸ்கர் விருது விழா தற்போது நடந்து வரும் நிலையில் விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை கிங் ரிச்சர்ட்ஸ் படத்தில் நடித்ததற்கான வில் ஸ்மித் பெற்றார். இதற்காக அவரை விழா மேடைக்கு அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் க்ரிஸ் ராக், ஜோக் சொல்வதாக சொல்லி வில் ஸ்மித்தின் மனைவியை உருவகேலி செய்யும் வகையில் பேசினார்.
இதனால் கடுப்பான வில் ஸ்மித் மேடையில் வைத்து க்ரிஸ் ராக்கை பளார் என அறைந்தது அங்கிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் உருவக்கேலிக்கு எதிரான முதல் அடி என வில் ஸ்மித்தின் செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி பேசியும் வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், சபாஷ்…. சரியான தண்டனை! நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார். அவர் உண்மையான கதாநாயகன். இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை அவை ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள். மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.