• Thu. Apr 25th, 2024

ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20 வரை நீதிமன்றக் காவல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரம்வீர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.


கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், நேற்று பிற்பகலில் கைது செய்தனர்.


தொடர்ந்து நள்ளிரவு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அவருக்கு உதவியதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், முன்னாள் அமைச்சரின் உறவினர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணன், நிஷான் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக விருந்தினர் அழைத்து வந்தனர். இந்நிலையில் முன்னால் அமைச்சரிடம் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் விசாரணை மேற்கொண்டனர்.


அதில் அவர் காரில் தப்பிச் சென்ற போது யாரெல்லாம் உதவினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், வியாழக்கிழமை காலை மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரம்வீர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *