• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் மிரட்டப்போகுது தமிழகத்தில் மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் அடைமழையுடன் தொடங்கியது. அதன்பின்னர் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. சென்னையில் பனியின் தாக்கம் அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த மழைபொழிவை தராமல் ஏமாற்றிவிட்டதோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை மழை மீண்டும் மிரட்ட காத்திருக்கிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் 5-ந்தேதி (அதாவது நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி இந்த பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்று புயலாக மாற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களில் மழை வெளுத்து வாங்க உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ந்தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பின்னர் மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8-ந்தேதி அன்று காலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். 6-ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ந்தேதி (வியாழன்) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடு்துறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.