• Wed. Sep 27th, 2023

கொதிக்காத சாம்பாரும்…ராகுல்காந்தியும்

பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டுமுடிந் திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை, இதோ, போற்றி! போற்றி ஏத்தினேன் போற்றி! போற்றி!!

ம்ம்ம் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு போற்றி தத்துவம் எல்லாம் பலமாக இருக்கிறது என பார்க்கிறீர்களா? அதில் தான் இருக்கிறது ஒரு சூட்சுமம் , இந்த டிஜிட்டல் நாரதருக்கு அண்ணா சொல்லிகொடுத்துவிட்டு சென்ற ஒரு போற்றிப்பாடல். இந்த பாடல் இப்போது எதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நேற்றைய தினம் சூடுபறக்க ஒரு சூப்பர் ஸ்பீச் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. எழுதி வைக்காம ,பிராம்ட்டர் இல்லாம 45 நிமிட பேச்சு உண்மையில் வியக்கத்தக்கது.
அதாவது ராகுல் இப்போது தான் ரியல் அரசியல் விளையாட்டுக்கு தன்னை மாற்றிக்கொண்டு வருகிறார். சினிமாவில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு பட்டப்பெயர் இருப்பது போல, நடிகர் ஜெமினிகணேசனுக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு, அது தான் சாம்பார். கோபமாக உணர்ச்சிப்பூர்வமாக அவரது வசனங்கள் இருக்காது.அப்படி பட்ட ஜெமினிகணேசனை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடத்தில் வெள்ளையத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சாம்பாரை கொதிக்க வைத்தது இந்த தமிழ் சமூகம்.

அப்படி தமிழ்நாடு என்ற பெயர் கொண்டு யார் பேசினாலும் அவர்களுக்கு மொழிப்பற்று வீரம் உணர்ச்சி இவை தானாக வந்து விடும் அப்படி ஒரு சாம்பார் தான் நேற்று நாடாளுமன்றத்தில் கொதித்தது. அப்படி என்ன பேசிவிட்டார் ராகுல் அந்த பேச்சின் முக்கிய சாராம்சங்களை பார்க்கலாம். அரசியலமைப்பை நீங்கள் படித்தீர்களானால், இந்தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்றே அழைக்கப்பட்டிருக்கும், அப்படியென்றால் என்ன? தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரர்களுக்கு இருக்கும் அதே உரிமை, மகராஷ்டிராவில் இருக்கும் எனது சகோதரிக்கும் உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள எனது சகோதரனுக்கும், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், ஜம்மு காஷ்மீர், அந்தமான் ஆகியவற்றில் உள்ள எனது சகோதரிக்கும் இருக்கும் அதே உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரனிடம் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்க, அவர் பதிலுக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்பார். இதற்கு பெயர் கூட்டு. இது ஒன்றும் ராஜ்ஜியம் கிடையாது. இதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எப்போதும், ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுடைய ஆளுகையை செலுத்த முடியாது. அவர்கள் (தமிழ்நாடு) ஒவ்வொரு முறையும் உங்களிடம் திரும்பத்திரும்ப வந்து, வந்து நீட் வேண்டாம், நீட் வேண்டாம் என்று கோரினார்கள். நீங்களோ, “கிடையவே கிடையாது, இல்லை, இங்கிருந்து வெளியே போங்கள்” என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்டமைப்பில் அவர்களின் குரலுக்கு மதிப்பில்லை.

இது தமிழ்நாடு குறித்து ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைகள். அதிலும் பாஜகவினரை பார்த்து நீங்க இப்போ இல்ல எப்போவும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது என்று உரக்க கூறியுள்ளார். இது பாஜகவிற்கு மட்டும்மல்ல காங்கிரஸ்க்கும் தான் இது பொருந்தும்.
என்ன புதியதாக நாரதர் சிண்டு முடிக்கிறார் என்று நினைக்க வேண்டாம்.அனைத்திலும் அரசியல் இருக்கும் போது தேசிய அரசியலில் உள்ள பகுப்பாய்வுகளை ஆராய்வதில் தவறு ஒன்றும் இல்லை. திமுகவும் ,அதிமுகவும் கழகம் நடத்தும் போது ,நாரதர் நான் கலகம் நடத்த கூடாதா?

சரி விஷயத்திற்கு வருவோம். ராகுல் இப்படி பேசியது திமுகவிற்கு நாங்கள் எப்போதும் துணை நிற்ப்போம் என்று எடுத்துரைக்கவே இந்த பேச்சு. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்ற திராவிட கொள்கையில் தேசிய கட்சியான காங்கிரஸ் தன்னை இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தேர்தல் கூட வருகிறது.அப்படி இருக்கும் போது இப்படியான பேச்சுக்கள் வருவது ஒன்றும் ஆச்சரியபடுவதற்கு அல்ல. இந்த பேச்சுக்கு இதுவரை எதிர்பேச்சு இல்லாமையா இருக்கும். தமிழ்நாடு குறித்து பெருமிதம் பேசும் நீங்கள் தேர்தலில் ஏன் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பேச்சு அடிப்படை காரணம் கூட வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் போட்டியிட முடிவு செய்துள்ளது தான் என்கின்றனர். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சி பொறுப்பில் மாறி மாறி இருந்து வருகின்றனர். ஆனால் தேசிய கட்சியினை ஒரு போதும் தமிழகத்தில் அமர விடமாட்டார்கள் .ஏனென்றால் திராவிட கட்சிகளின் முந்தைய வரலாறே காங்கிரஸ் எதிர்ப்பு தான், தற்போது காங்கிரஸ் திருந்தி வருகிறது. இந்த நாட்டிற்காக எனது தந்தை , எனது பாட்டி ரத்தம் சிந்தியுள்ளனர். அவர்களுக்காக நான் பேசக்கூடதா என்று எல்லாம் வீர வசனம் பேசிவிட்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது தமிழ்நாடு குறித்து அதிகமாக பேசினீர்கள் என்று கேட்டதற்கு , நானும் தமிழன் தான் என்று இந்தியில் கூறிவிட்டு சென்றார்.

கலைஞர் கருணாநிதி இறந்த பிறகு எப்படி ஆட்சியில் அமர தனது உடை நடை பேச்சு அனைத்தையும் மாற்றி , ஆட்சியில் அமர்வது லட்சியம் என்ற முனைப்புடன் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்ப்பட்டது போல தான் தற்போது ராகுல்காந்தியும் மாறி வருகிறார். இருவருக்கும் ஒரு ஒற்றுமை தான் இருவருக்கும் பயிற்சி திட்டம் வகுத்தது ஐ பேக் பிரசாந்த் கிஷோர் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *