திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொளுத்தும் வெயிலில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் விட்டு உற்சாகமாக வரவேற்றனர்.
பொதுமக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசிய போது கூறியதாவது:
2016ல் ஒரு அன்பை எனக்கு வழங்கினீர்கள். வெற்றி பெற்று சட்டமன்றத்தில் வேடசந்தூர் தொகுதி மக்களின் பல்வேறு பிரச்சனைகள் பற்றி அதிக நேரம் பேசினேன். பல்வேறு நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் பெற்று கொடுத்தேன்.
நான்கு வழிச்சாலை திட்டம், பற்றாக்குறை இல்லாத அளவிற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். வறட்சி காலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்தேன்.

கஜா புயல் மற்றும் கொரோனா காலத்தில் என்னால் முடிந்த அளவிற்கு உணவு பொருட்கள் மற்றும் அனைத்து கிராமம் கிராமமாக சென்று மருத்துவசேவை செய்தேன். கொரோனா காலத்தில் நான் மருத்துவர் என்ற முறையில் கட்சி வேறுபாடு இன்றி அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை அளித்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளேன். இளைஞர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் வேடசந்தூர் தொகுதி மக்களுக்காக எந்த முன்னேற்றத் திட்டமும் நிறைவேற்ற வில்லை.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். அதுபோல திமுக ஆட்சியில் வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்தி கொடுக்கப்படவில்லை.
ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற வேண்டும் என்றால் கையில் அதிகாரம் வரும்போது அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் பொய் தேர்தல் வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்து திமுக அரசு அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி விட்டது.
இன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
கிராம பகுதிகளில் ஒரே தொகுப்பு வீட்டில் பல குடும்பங்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஆதி திராவிட மக்களுக்கு ரூ 7.50 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
நான் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதிகளவு வேலை வாய்ப்பு முகாமை நடத்தினேன். நான் மீண்டும் வெற்றி பெற்றால் 200 தலைசிறந்த தனியார் நிறுவனங்களை கொண்டு வருடம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி உயர் கல்வி கற்றுள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பை பெற்று தருவேன்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவமனைகளை கொண்டு கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி அனைத்து தரப்பு மக்களும் உயர் சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றவுடன் அனைத்து மகளிருக்கும் எந்த நிபந்தனை இன்றி மாதந்தோறும் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு மருந்து போடுவது போல் அனைத்து குடும்பங்களுக்கும் அதிமுக பதவியேற்ற முதல் மாதத்தில் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 10 ஆயிரம் செலுத்தப்படும்.

மீண்டும் உங்களிடம் வந்துள்ளேன் எனக்கு அதே அன்பை வழங்க வேண்டும் அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.
உடன் குஜிலியம்பாறை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ச.மலர்வண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்திக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளீட்டு ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.






