• Tue. Apr 23rd, 2024

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக பொதுமக்கள் ஆங்காங்கே இருக்கக்கூடிய கடைகளில் குடிநீர், குளிர்பானங்களை குடித்து தாகத்தை அடக்கி கொள்கின்றனர்.ஆனால் இந்த கோடை வெயில் சமாளிக்க முடியாமல் நகர பகுதிகளில் இருக்க கூடிய ஜீவராசியான பறவைகள், பூச்சிகள் போன்றவை தண்ணீர் கூட கிடைக்காமல் உயிரிழக்கக்கூடிய நிலை தொடர்ந்து வருகிறது இந்நிலையில் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
மதுரை மாநகரின் மையப்பகுதியான சிம்மக்கல், மாசி வீதிகள், எஸ்.எஸ்.காலனி, பேச்சியம்மன் படித்துறை, ஷெனாய் நகர் ஆகிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் இருக்க கூடிய தெருக்களுக்கு சென்று தான் வைத்துள்ள சிறிய அளவு ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி ஒவ்வொரு வீதிகளிலும் சென்று பறவைகள் கோடைகாலம் என்பதால் தாகத்தோடு இருக்கும் தங்களது மாடிகளிலோ வீடுகளின் ஜன்னல் ஓரங்களிலோ தயவு செய்து பாத்திரங்களிலோ டப்பாக்களிலோ தண்ணீரை ஊற்றி வைத்து பறவைகளின் தாகம் தீர்க்க உதவுங்கள் எனக்கூறி ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.தங்களுக்கு கிடைத்தால் போதும் யார் என்ன ஆனால் எண்ணக்கூடிய இந்த சமூகத்தில் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக வீதி வீதியாக சென்று கடும் வெயிலிலும் தன்னலம் கருதாமல் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இள அமுதனின் செயலைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.


கொரோனா விழிப்புணர்வு, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு போன்ற பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் இள அமுதன் திருமணம் செய்யாமல் பொதுமக்களின் நலனுக்காக செயல்பட்டுவருவது குறிப்பிடதக்கது.வெயில்காலங்களில் பறவைகளின் தாகம் தீர்க்க அனைவரும் முன்வர வேண்டும் இந்த பிறவியில் அனைத்து உயிர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்துவருகிறேன் என இளஅமுதன் தெரிவித்தார்.
இள அமுதன் தொடர்ந்து தங்களது பகுதியில் ஏற்படுத்திவரும் விழிப்புணர்வு காரணமாக வீடுகளில் மாடிகளில் தங்களால் முடிந்தவரை பாத்திரங்களிலும், டப்பாக்களிலும் தண்ணீர் வைத்துவருகிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *