• Wed. Dec 11th, 2024

டேனிஷ் சித்திக்கி உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு புலிட்சர் விருது

2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் மறைந்த டேனிஷ் சித்திக்கி இரண்டாவது முறையாக இப்பரிசினை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா காலத்தின் கோர முகங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபீச்சர் ஃபோட்டோகிராஃபி பிரிவில் இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் நியூஸ் ஃபோட்டோகிராஃபி பிரிவில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் குறித்த புகைப்படங்களை எடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் மார்கஸ் யாமுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் பத்திரிகையாளருக்கு 2022 புலிட்சர் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த டேனிஷ் சித்திக்கி… 1983-ல் புதுடெல்லியில் பிறந்த டேனிஷ், இளமையும் ஆற்றலும் உச்சமாகத் திகழும் பருவத்தில் 38 வயதில் இறந்தார். அமெரிக்காவில் செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மாறிய உலகத்துக்குள் நுழைந்த ஒரு தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதி அவர். ஜனநாயகரீதியான கருத்துப் பரிமாற்றங்கள், போராட்டங்கள் தீவிரமாக ஒடுக்கப்படத் தொடங்கிய அதேவேளையில் மதரீதியான, இனரீதியான அடையாளங்கள் கூர்மையடைந்து பரஸ்பரம் மோதிக்கொண்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்ந்து செய்திப் புகைப்படங்களை எடுத்துத்தள்ள வேண்டிய பரபரப்பிலும் செய்திக்குப் பின்னால் இருக்கும் மனித அம்சத்துக்குக் கவனம் அளித்தவர் டேனிஷ் சித்திக்கி. ரோஹிங்கியா அகதிகள் சந்தித்த கொடூரங்கள், சென்ற ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த கலவரம், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்கள், கரோனா இரண்டாம் அலை போன்றவை தொடர்பான ஒளிப்படங்கள் நினைவுகூரத்தக்கவை. ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அவர் எடுத்த ஒளிப்படங்கள்தான் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத்தந்தன. கலைஞனுக்கு மறைவில்லை என்பதை நிரூபிப்பதுபோல், டேனிஷ் சித்திக்கியின் மறைவுக்குப் பின்னரும் அவருக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது.