குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலம் இயற்கையான உணவுகளை வழங்கி போதிய எதிர்ப்புச்சக்திகள் உருவாக்கிட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவுக்கண்காட்சி திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது ஆட்சியர் பேசியதாவது..,ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து விழா நடைபெறுகிறது. அதனடிப்படையில் தற்பொழுது இயற்கை உணவுகளால் செய்ய்ப்பட்ட மாபெரும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில் நல்ல இயற்கையான, உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக குழந்தைகளை பராமரித்திட வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
எனவே குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலம் இயற்கையான உணவுகளை வழங்கி போதிய எதிர்ப்புச்சக்திகள் உருவாக்கிட வேண்டும் மேலும் தங்கள் பகுதிகளில் எடை குறைவான குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதுடன் பெற்றோர்களிடமும் சத்தான உணவுகள் வழங்குவது குறித்து அறிவுரை வழங்கி எடை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் தாய்மார்களுக்கும். குழந்தைகளுக்கும் ஒரு பாலமாக இருந்து ஆரோக்கியமான குழந்தையை வழிநடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.