• Wed. Apr 23rd, 2025

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை

Byவிஷா

Mar 20, 2025

சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை பனகல் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் அனுமதி அளித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி போராட்டம் நடைபெறும். இதனால் அந்தப் பகுதி மட்டும் அல்லாமல் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல் ஆணையர் அருண் விசாரணை நடத்தினார். இதில், போராட்டத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் இங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து, வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். அதற்கு பதிலாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் உரிய சட்ட வழிகாட்டுதலின்படி போலீஸாரிடம் அதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.