• Sat. Apr 26th, 2025

ரூ.500 நோட்டுகளை தரையில் கொட்டி தர்ணா போராட்டம்

ByMuruganantham. p

Mar 24, 2025

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க 25 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரவும் வீடு வழங்கவும் கோரி, குறவர் சமுதாய தம்பதியர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் 500 ரூபாய் நோட்டுகளை தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் தம்பதியர் திடீரென தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தாங்கள் மஞ்சள் பையில் கொண்டு வந்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களை தரையில் கொட்டி நீதி கேட்டு புலம்பி தவித்தனர்.

போலீஸ் விசாரணையில் தம்பதியர், தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்த குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் உமாதேவி என்பது தெரிய வந்தது.

மேல் விசாரணையில், குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ், குறவர் சமுதாய மக்களுக்கு தேனி வடபுதுப்பட்டி அருகே உள்ள வடவீரநாயக்கன் பட்டியில் கட்டப்படுள்ள தனிநபர் தொகுப்பு வீடுகளில் முன்பணம் செலுத்துவோருக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் வன வேங்கைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்த உலகநாதன் என்பவர், வீடு வாங்கி தருவதாக கூறி, வேல்முருகன் மற்றும் உமாதேவி தம்பதியினரிடம் 25 ஆயிரம் பணம் வாங்கியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அதோடு, மேலும் செலுத்த வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை வட்டிக்கு வாங்கி கொண்டு சென்ற போது, குடிசை மாற்று வாரியத்தில் அந்த வீடு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, தங்கள் இழந்த பணத்தை மீட்டு குடிசை மாற்று வாரிய தொகுப்பு வீடுகளில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரி, தாங்கள் கொண்டு வந்திருந்த ஐம்பதாயிரம் ரூபாயை தரையில் கொட்டி போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, தேனி ஆட்சியரிடம் அனுப்பி வைத்தனர். தம்பதியரின் மனுவை ஏற்ற தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.