• Wed. Apr 23rd, 2025

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக, கம்பம் தெற்கு காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளை கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராகுல், அவரது மகன் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரும் கடந்த 10 ஆம் தேதி கம்பம் வ உ சி திடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பரந்தாமன் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதியது. இதில் வழக்கறிஞர் மற்றும் காவலர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல, வழக்கறிஞர் ராகுலுக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் மற்றும் சிலர் சென்று காவல் நிலையத்தில் பேசி உள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு வந்த நபர்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் காவல் நிலையத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் இல்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கறிஞர்கள் மற்றும் அங்கு இருந்த ஒன்பது நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஒருதலைபட்சமாக செயல் படுவதாகவும், மேலும் சம்பவ இடத்தில் இல்லாத வழக்கறிஞரையும் வழக்கில் சேர்த்திருப்பதையும் கண்டித்து இன்று உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உடனடியாக கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டுக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் பார்த்திபன், உத்தமபாளையம் பார் அசோசியேசன் தலைவர் செல்வன், செயலாளர் லலிதா, உத்தமபாளையம் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மன்னர் மன்னன், செயலாளர் பால்பாண்டி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்பதற்காக வழக்கறிஞர்கள் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறுகையில், காவல் நிலையங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்களை கம்பம் தெற்கு காவல்துறையினர் தரக்குறைவாக நடத்துவதாகவும், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் இல்லையென்றால் தங்களது போராட்டம் தமிழ்நாடு முழுவதும் ஜாக் கமிட்டியின் மூலமாக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்