
ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம்…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில் கலந்துகொண்ட ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் பொதுமக்களுக்கு இலவச மீன்களை வழங்கினார்.
அதன்படி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பொதுமக்களின் பார்வைக்காக 27 கிலோ எடை கொண்ட மயில் கோலா என்ற மீன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மீனவர் அணி சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார், அக்கட்சியின் சேவகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில மீனவர் அணிச் செயலாளர் தேவி சசிகுமார் செய்திருந்தார்.
மேலும் பிரதமர் நரேந்திரமோடி பொது சேவையில் பணியாற்றி, வருகின்ற அக்டோபர் 7ம் தேதியன்று 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டியும், தமிழக பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ‘சேவை மற்றும் சமர்ப்பணம்’ என்ற பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெறும் தூய்மை பணியினை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றார். தூய்மை பணியை தொடங்கி வைக்கும் வகையில் அண்ணாமலையும், எல்.முருகனும் கடற்கரையில் குப்பைகளை அகற்றினார்கள்.
பா.ஜ.க சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் எண்ணற்ற சாதனைகளைத் துண்டு பிரசுரங்கள் மூலம் விளக்குதல், அவரின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்தல், ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல், வினாடி-வினா போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒன்றிய அளவில் நடத்த இளைஞரணி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் பா.ஜ.க.வின் இளைஞரணி நிர்வாகி வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட இளைஞரணியினரால், ஆளும் பா.ஜ.க அரசின் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், மக்கள் பணிகளையும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘மோடி மேளா கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது.
சுதந்திர தின பவளவிழா ஆண்டையொட்டி தியாகிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு தமிழக பா.ஜனதா இளைஞரணி சார்பில் மரியாதை செய்யப்பட உள்ளதாகவும், அக்டோபர் 2-ந்தேதி சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய இடங்களில் இளைஞரணி சார்பில் தூய்மை பணிகளும், இளைஞர்கள் இணைந்து தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.