• Sun. Feb 9th, 2025

சிறையில் அடைப்பதாக எடப்பாடியாரை மோடி மிரட்டினார்… முன்னாள் அமைச்சர் பகீர் புகார்!

ByIyamadurai

Jan 22, 2025

பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கோடநாடு கொலை வழக்கு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறையில் அடைத்துவிடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், தமிழ்நாட்டில் எந்தக்கட்சி வந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு இடையே தான் போட்டி. அதிமுக, திமுக என்ற இரண்டு அணிகள்தான் தேர்தலில் இருக்கும். மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். இதனால் எந்த கட்சியானாலும் இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணிக்கு வருவார்கள்.

அதிமுக மீது யார் எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதில் வெற்றி பெற்று கட்சியை எடப்பாடி பழனிசாமி திறம்பட நடத்திக்கொண்டிருக்கிறார். அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு ஒருவரிடம் சென்றிருந்தாலும் கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டு சென்றிருப்பார்கள்.

கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் கோடநாடு கொலை வழக்கு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சேர்த்து சிறையில் அடைத்துவிடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி மிரட்டினார். ஆனால், சிறுபான்மையினரின் நலனுக்காக பாஜக கூட்டணியை அதிமுக புறக்கணித்தது. திமுக, பாஜவுடன் இன்று மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியைக் காப்பாற்றி வருகிறது என்றார்.