• Fri. Apr 19th, 2024

மதுரையில் வாக்குபதிவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3நகராட்சிகள், 9பேரூராட்சிகளில் 313 மாமன்ற உறுப்பினர் பதவிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

100 மாமன்ற பதவிகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 815 வேட்பாளர்களும், 3நகராட்சிகளில் 78 பதவிகளுக்கு 335 வேட்பாளர்களும், 126 பதவிகளுக்கு 552 வேட்பாளர்கள் என ஒட்டுமொத்தமாக 313 பதவிகளுக்கு 1702 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் 322 மாமன்ற பதவிகளில் பாலமேடு, வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 313 மாமன்ற பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது,

மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,615 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளது, 338 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 127 வாக்குச்சாவடிகளை வெப் லைவ் கேமிரா மூலமாக நேரடியாக மாநில தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படுகிறது. 211 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பார்வையிடுவார்கள், வாக்குப்பதிவு பணிகளில் 7,760 தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,933 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,866 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு மாநகரில் 1750 காவலர்களும், புறநகரில் 2ஆயிரம் காவலர்கள் என 3750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா 4 தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை வாக்குப்பதிவில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார் என்ற விவரங்களை அளிக்கும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *