தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனை அடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் திடீரென ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது காவல்துறையினர் வாகனங்களை எவ்வாறு சோதனை செய்கின்றனர் என்பதை ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது, நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளோம். கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊர் தகராறு, ஜாதி கலவரம் போன்றவற்றை கணக்கில் எடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அந்த பகுதி முழுவதும் பதற்றமானவை என கணக்கிடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கடலூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த உடனே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த வித பாதிப்பும் இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் மற்றும் மாசி மக விழா சேர்ந்து நடைபெற இருப்பதால் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, விருதாச்சலம் புதுச்சத்திரம், பெரியப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 726 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அதில் 410 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதலாக காவல்துறையினரை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.