• Sat. Apr 20th, 2024

பெரியகுளத்தில் இலவச சிலம்பம் பயிற்சி அளிக்கும் ஆசிரியருக்கு பாராட்டு..!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் கற்கும் பயிற்சியை இலவசமாக அளித்து வரும் ஆசிரியருக்கு கீழவடகரை ஊராட்சி மன்றம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்காப்பு கலைகளில் ஒன்றான இந்த சிலம்பம் பயிற்சியை “மாவீரன் நேதாஜி சிலம்பம் பயிற்சி மைய” ஆசிரியர் தங்கபாண்டியன் அளித்து வருகிறார். இவரின் மகத்தான சேவையை பாராட்டி கீழவடகரை ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர் நற்சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.


இந்த பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு, கீழ வடகரை நூலகர் எ.மோகன் தலைமை வகித்தார். கீழவடகரை ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். வைத்தியநாதபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜமுத்து, வழக்கறிஞர் நாகராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தற்காப்பு கலையின் அவசியம் குறித்தும், குறிப்பாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டு வாழ்வில் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று பேசினர்.


சிலம்பம் பயிற்சியாளர் தங்கப்பாண்டியிடம் பேசியபோது..,
தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பத்தை நான் முறையாக கற்றுக் கொண்டேன். நான் கற்ற இந்த கலையை பிறருக்கும் கற்றுத்தர வேண்டும் என நினைத்தேன். அதன்படி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிலம்பத்தை ஏழை, எளிய மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருப்பூர் போன்ற ஊர்களில் கோப்பை மற்றும் மெடல்களை அள்ளி குவித்துள்ளோம். சமீபத்தில் மதுரையில் தனியார் கல்லூரியில் நடந்த சிலம்பம் போட்டியில் அதிக பரிசுகளை அள்ளிக்குவித்து, இரண்டாமிடம் பிடித்ததற்காக 2 அடி உயரமுள்ள சுழற்கோப்பை மற்றும் 5 கிராம் வெள்ளி பதக்கம் பெற்றோம். என் மூச்சு உள்ளவரை இந்த சிலம்பம் கலையை பிறருக்கு கற்றுக் கொடுப்பதை லட்சியமாக கொண்டுள்ளேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *