புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருள்மிகு உத்தமநாதர் சாமி உடனுறை பிரகதாம்பாள் திருக்கோவில் சோழர் காலத்து மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கீரனூரை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தலைமைக் கோவிலாக திகழ்கிறது. இக்கோவிலில் 80 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு உத்தமநாதர் உடனுறை பிரகதாம்பாள் சுவாமிக்கு புதிய திருத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கீரனூரை இஸ்லாமிய பெருமக்கள் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து திரண்டு சீர்வரிசை எடுத்து வந்த பிறகு சுவாமி பிரதிஷ்டை மற்றும் புதிய தேர் வெள்ளோட்ட விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை போற்றக்கூடியதாக அமைந்தது. மேலும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கீரனூரில் நான்கு மாட வீதிகளிலும் சிலம்பம், குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், இசை ,மயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் திருத்தேர் வெள்ளோட்ட விழாவினை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்ற வருகிறது. எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் திரு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை காண்பதற்காக கீரனூரை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.