தைவான் நாட்டின் தெற்குப் பகுதியில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது,
தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாய் அருகே நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தைபேவில் இருந்த பல்வேறு கட்டடங்களும் குலுங்கி இருக்கின்றன. இந்த நிலநடுக்கம் சியாய் பகுதியில் உள்ள டாபு நகரின் 9.4 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் யுஜிங் மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் அலமாரிகள் இடிந்து தரை முழுவதும் பானங்கள் சிதறிக் கிடந்தன.நான்சி மாவட்டத்தில் ஒரு பங்களா இடிந்து விழுந்து மூன்று பேர் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன
மேலும், தைபேவில் உள்ள சிப் தயாரிக்கும் நிறுவனமான டிஎஸ்எம்சி தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்களை வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத் துறை தரப்பில் கூறுகையில், சியாய் நகரில் சிலர் சேதமடைந்த கட்டமைப்புகளில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டதால் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.