துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ஓட்டலில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது- இந்த பயங்கர தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலு மாகாணத்தில் உள்ள கர்தல்காயா என்ற ரிசார்ட்டில் 12 மாடிகளை கொண்ட இந்த பனிச்சறுக்கு விடுதியில் தான் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
வடமேற்கு துருக்கியின் பிரபலமாக திகழக்கூடிய இந்த பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பள்ளி விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் குவிந்தனர்.
ஓட்டலின் கூரை மற்றும் 12வது மாடியில் அதிகாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது மற்ற தளங்களுக்கும் பரவியது, அப்போது ஓட்டலில் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அறைகள் முழுவதும் புகை நிரம்பி தீ பரவியதால் அதிலிருந்து தப்பிக்க பலர் மேல் தளங்களில் இருந்து கயிறு, பெட்ஷீட் போன்றவற்றை பயன்படுத்தி கீழே இறங்கியுள்ளனர். சிலர் பயத்தில் கீழே குதித்த போது உயிரிழந்தனர். தீக்காயம், மூச்சுத் திணறல் என 76 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
மேலும். காயமடைந்த 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.