தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக கவர்னர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சினை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட யாரும் பங்கேற்பதில்லை என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார். மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட்டிற்கு எதிரான தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார். மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மசோதாவின் நிலைஇதுவரை என்னவென்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் அங்குச்சென்று தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகப் பேசி வருகிறார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் உள்ள மருத்துவர் சுதா சேஷய்யனின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேலும் ஒருஆண்டுக்கு எதேச்சதிகாரமாகப் பதவி நீட்டிப்பு ஆளுநரால் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என முடிவு செய்துள்ளது.என்று அவர் கூறியுள்ளார்.கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கவர்னரின் தேனீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலி கூத்தாக உள்ளது” என்று கூறியுள்ளார்.